புதுச்சேரி இந்திரா காந்தி – ராஜீவ் காந்தி சதுக்கம் மேம்பால பணி: ஒப்பந்ததாரர்களிடம் நிலத்தை ஒப்படைத்தது பொதுப்பணித்துறை!

புதுச்சேரி: புதுச்சேரி நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை ரூ.436.18 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகளுக்கான இடங்கள் ஒப்பந்த நிறுவனங்களிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் (MoRTH) அனுமதியுடன் மொத்தம் 3.877 கி.மீ தொலைவுக்கு இந்த பிரம்மாண்ட மேம்பாலம் அமையவுள்ளது. இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து ராஜீவ் காந்தி சதுக்கம் வரை 1,150 மீட்டர் நீளம் மற்றும் 21.5 மீட்டர் அகலத்தில் முதன்மை மேம்பாலமும், இந்திரா காந்தி சதுக்கத்தில் வட்ட வடிவ சுழல் மேம்பாலமும் அமையவுள்ளன. மேலும், புதிய பேருந்து நிலைய இணைப்புப் பாதை (853 மீட்டர்), விழுப்புரம் சாலை இணைப்பு (300 மீட்டர்) மற்றும் திண்டிவனம் செல்லும் ஈ.சி.ஆர் இணைப்பு (524 மீட்டர்) என விரிவான கட்டமைப்புடன் இப்பாலம் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகளை டி & டி இன்ஃப்ரா லிமிடெட் மற்றும் தரிவால் பில்ட்டெக் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ள உள்ளன. இந்நிலையில், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் ஸ்ரீநிவாசராம், உதவி பொறியாளர் சிவப்பிரகாசம் மற்றும் இளநிலை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடங்களை நேரில் ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான களத்தை ஒப்பந்ததாரர்களிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.

