பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

புதுச்சேரி, செப். 17:
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மடல் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், “பாரதப் பிரதமராக விளங்கும் தங்களுக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில், தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், வலிமையுடனும் நீடூழி வாழ்ந்து, நமது பாரத தேசத்திற்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தொண்டாற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”
“தங்களுடைய ஆற்றல்மிக்க தலைமை, உலகெங்கிலும் வாழும் இந்தியர்களுக்குப் புதிய தன்னம்பிக்கையையும் பெருமிதத்தையும் வழங்கியுள்ளது. சர்வதேச அரங்கில் இன்று இந்தியா பெற்றுள்ள நன்மதிப்பும் அங்கீகாரமும் ஒவ்வொரு இந்தியருக்கும் அளப்பரிய பெருமிதத்தை அளிக்கிறது. உலகளாவிய அரங்கில் தங்களின் தலைமைப் பண்பையும் அர்ப்பணிப்பையும் உறுதியையும் உலகம் வியந்து பார்க்கிறது. இந்தியாவின் குரல் உலகளவில் மிகுந்த வலிமையோடும் மரியாதையோடும் ஒலிக்கிறது.”
“2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ (Viksit Bharat @2047) என்ற தங்களின் மகத்தான கனவு, இன்று ஒட்டுமொத்த இந்திய மக்களின் கூட்டு இலக்காக மாறியுள்ளது. தங்களின் தொலைநோக்குப் பார்வையை நம்பி தங்களுடன் துணைநிற்கும் நாங்கள், தேசக் கட்டமைப்பிற்கான இந்த மாபெரும் பணியில் எங்களது பங்களிப்பை ஆற்றுவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். தேச நலனுக்கான தங்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக கரங்களை வலுப்படுத்த நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்று அமைச்சர் நமச்சிவாயம் தனது வாழ்த்துச் செய்தியில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
