ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: ஒன்றிய அரசுக்கு பி.வில்சன் எம்.பி. கடும் கண்டனம்!
புதுடெல்லி, செப். 17: ரூபாய் 2,000-க்கு மேற்பட்ட யுபிஐ (UPI) மற்றும் ரூபே (RuPay) டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெருவோர வியாபாரிகள், பூ விற்பனையாளர்கள், தேநீர்க் கடைகள், ஆட்டோ – டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் மளிகைக் கடைக்காரர்கள் உள்ளிட்ட சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இத்தகைய கட்டணங்கள் பெருத்த சுமையை ஏற்படுத்தும். நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பைத் தாண்டும் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் வரிவிதிப்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது, சிறு வியாபாரிகள் எவ்வித இன்னலுக்கும் ஆளாக மாட்டார்கள் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். அந்த உறுதிமொழி குறுகிய காலத்திற்குள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிதியமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



