புதுச்சேரி

புதுச்சேரி அரசு பள்ளிக்கு மதுபோதையில் வந்த 3 மாணவிகள்: ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி!

புதுச்சேரி, செப். 11: புதுச்சேரி நகரப் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாணவிகள் சிலர் மதுபோதையில் வந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நகரப் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பறையில் ஆசிரியர் வழக்கம் போல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் இருந்த மூன்று மாணவிகள் இருக்கையில் அமர முடியாமல் தள்ளாடியபடி இருப்பதை ஆசிரியர் கவனித்தார்.

அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆசிரியர், அருகில் சென்று மாணவிகளை எழுப்பி விசாரித்தபோது, அவர்களால் சரிவர பேச முடியாமல் உளறியுள்ளனர். தீவிர சோதனையில் அவர்கள் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. உடனடியாக இந்த விவகாரம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் நேரில் வந்து மாணவிகளைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோதும் அவர்களால் சரியாகப் பேச இயலவில்லை. இதனைத் தொடர்ந்து, உடனடியாக சம்பந்தப்பட்ட 3 மாணவிகளின் பெற்றோர்களுக்கும் அவசரத் தகவல் அளிக்கப்பட்டு பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.

பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் மதுபோதையில் தள்ளாடுவதைக் கண்டு கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். பின்னர், மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக விளக்கக் கடிதம் பெறப்பட்டது. மேலும், எச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 14-ஆம் தேதி வரை அந்த மூன்று மாணவிகளும் பள்ளிக்கு வரக் கூடாது என உத்தரவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்குப் பள்ளி நிர்வாகம் சார்பில் விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த 3 மாணவிகளையும் நகரப் பகுதியில் உள்ள வெவ்வேறு அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுப் பள்ளிக்கு மாணவிகள் மதுபோதையில் வந்த இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன