உத்தரகாண்ட் பொறுப்பு தலைமை நீதிபதி புதுச்சேரி வருகை: ஒருங்கிணைப்புப் பணிக்காக அரசு ஊழியர்கள் நியமனம்

புதுச்சேரி, 22/10/2024:
உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி மனோஜ் குமார் திவாரியின் புதுச்சேரி வருகையையொட்டி, ஒருங்கிணைப்புப் பணிகளை (Liaison Duty) மேற்கொள்வதற்காக அரசு ஊழியர்களை நியமித்து புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை துணைச் செயலாளர் எஸ். முருகேசன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ குறிப்பாணையில், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி மனோஜ் குமார் திவாரி அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் புதுச்சேரிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருகையின்போது பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மின்துறை நிதி கட்டுப்பாட்டு அலுவலக உதவியாளர் ஏ. சதீஷ்குமார் மற்றும் பள்ளிக் கல்வி இயக்கக ஓட்டுநர் கே. கதிர்வேலு ஆகியோர் செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநரகத்தின் கீழ் தற்காலிகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு செய்தித்துறையிடம் பொறுப்பை ஏற்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு விதிகளின்படி பயணப்படி மற்றும் தினசரிப் படி வழங்கப்படும் என்றும், அவசரக் காரணங்களைத் தவிர வேறு எவ்வித விடுப்பும் இந்த நாள்களில் அவர்களுக்கு வழங்கக் கூடாது என்றும் துறைத் தலைவர்களுக்கு கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

