தமிழ்நாடு

மதுரையில் 15 மாவட்டங்களுக்கான மண்டல ஆய்வுக் கூட்டம்: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் என்.ஆனந்த் தீவிர ஆய்வு!

மதுரை: தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் “வெற்றித் தமிழகம் – தொலைநோக்கு ஆவணம்” செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான மூன்றாவது மண்டல ஆய்வுக் கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த், MLA தலைமை தாங்கி, துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் விரிவான ஆய்வை மேற்கொண்டார்.

இம்மண்டல மாநாட்டில் மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 15 மாவட்டங்களைச் சேர்ந்த வளர்ச்சித் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது.

குறிப்பாக, தமிழக அரசின் “வெற்றித் தமிழகம் – தொலைநோக்கு ஆவணம்” செயல்திட்டத்தின் கீழ் வரும் காலங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், நீர்நிலைகள் தூர்வாருதல், கிராமப்புற சாலை வசதிகள் உள்ளிட்ட முக்கிய வளர்ச்சி இலக்குகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் விரிவான ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் வழங்கினார்.

மேலும், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், கிராமப்புற மற்றும் தாழ்வான பகுதிகளில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பேரிடர் காலங்களில் உடனடி உதவி, வடிகால் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தி மக்களுக்குத் தடையற்ற சேவை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன