புதுச்சேரி

ஏ.எஃப்.டி. பஞ்சாலை ஓய்வுபெற்ற ஊழியர்களின் நிலுவை ஊதியம்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் மனு!

புதுச்சேரி:

புதுச்சேரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ் (ஏ.எஃப்.டி.) பஞ்சாலையின் ஓய்வுபெற்ற ஊழியர்கள், தங்களின் நீண்டகால நிலுவை ஊதியத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவைச் சட்டப்பேரவை வளாகத்தில் நேரில் சந்தித்து விரிவான மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் தொழிலாளர்கள் முன்வைத்துள்ள முக்கியக் கோரிக்கையில், கடந்த 01.01.1999 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாகத் தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்த உத்தரவின்படி கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஊதியத் தொகையை ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், புதுச்சேரியைப் புரட்டிப்போட்ட ‘தானே’ புயல் பாதிப்பிற்குப் பின்னர் அப்போதைய அரசு முன்வந்து அறிவித்த தொழிலாளர் நலன் சார்ந்த நிவாரண மற்றும் நிதி நடவடிக்கைகளின் அடிப்படையில், இதுவரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள மீதமுள்ள தொகையையும் நிலுவை ஊதியத்துடன் சேர்த்து காலதாமதமின்றி வழங்கிட உரிய நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கோரிக்கை மனுவினை ஏ.எஃப்.டி. பஞ்சாலை அனைத்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் சங்கத் தலைவர் சத்தியசீலன், செயலாளர் சின்னதுரை, பொருளாளர் ரவி மற்றும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களான வாழமுனி, ஜெயபாலன் ஆகியோர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் நேரில் வழங்கினர்.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர், இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை மற்றும் பஞ்சாலை நிர்வாக உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும், தொடர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் உரிய நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன