திருமணம் செய்வதாகக் கூறி புதுச்சேரி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: திருச்சியைச் சேர்ந்த நபர் கைது!
புதுச்சேரி, அக். 23: புதுச்சேரியில் மறுமணம் செய்ய வரன் தேடிய பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய திருச்சியைச் சேர்ந்த நபரைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
புதுச்சேரியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் மறுமணத்திற்காக பிரபல திருமணத் தகவல் இணையதளம் (Matrimony site) மூலம் வரன் தேடி வந்துள்ளார். அப்போது அவருக்குத் திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீபன் (47) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேசி பழகிய நிலையில், அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஸ்ரீபன் ஆசை வார்த்தைகள் கூறி நம்ப வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அப்பெண்ணுடன் நெருங்கிப் பழகிய ஸ்ரீபன், திருமணம் செய்வதாகக் கூறி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் திருமணப் பேச்சைத் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்த அவர், நாளடைவில் தொடர்பைத் துண்டித்து அப்பெண்ணுக்குக் கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாகப் புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரியக்கடை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீபனைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


