புதுச்சேரி அரசு கல்லூரி பெண் பேராசிரியர்கள் இரவு நேர போராட்டம் தொடக்கம்
புதுச்சேரி, புதுச்சேரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பெண் பேராசிரியர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் இரவு நேர போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தொடர்பான அரசாணையை எதிர்த்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு சமீபத்தில் வெளியிட்ட பேராசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் ஊதிய நிலுவை தொகை தொடர்பான புதிய அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும், துணைப் பேராசிரியர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் 2017-ம் ஆண்டு முதல் இணைப் பேராசிரியர் தகுதி பெற்றவர்களுக்கு அந்தப் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு கல்லூரி பேராசிரியர்களும் கடந்த 4-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது பெண் பேராசிரியர்கள் இரவு நேர போராட்டத்திலும் ஈடுபட்டு வருவதால், கல்வித்துறையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.