தொடர் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாயும்: சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் – அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!
புதுச்சேரியில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தயவுதாட்சண்யமின்றி குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்றும், இச்சட்டத்தில் கூடுதல் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்களை முற்றிலுமாக ஒடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்களின் அமைதிக்கும், வணிகர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், சட்டவிரோத செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த காவல்துறைக்குக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பாத வகையில் புதுச்சேரி குண்டர் தடுப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதுச்சேரி அமைதிப் பூங்காவாகத் திகழ அனைத்து நடவடிக்கைகளும் உறுதி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

