புதுச்சேரி வானில் சூரியனைச் சுற்றி தோன்றிய பிரம்மாண்ட ஒளிவட்டம்: ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்!

புதுச்சேரி: புதுச்சேரி வான்பரப்பில் இன்று சூரியனைச் சுற்றி வட்ட வடிவிலான பிரம்மாண்ட ஒளிவளையம் (Sun Halo) தோன்றிய அரிய வானியல் நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வியப்பையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. வானில் சூரியனைச் சுற்றி வானவில் போன்ற நிறங்களுடன் காட்சியளித்த இந்த வட்டத்தை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கண்டுகளித்து தங்கள் செல்போன்களில் படம்பிடித்தனர்.
வானியல் மற்றும் வளிமண்டல அறிவியல் ரீதியாக இந்த நிகழ்வு ‘22 டிகிரி ஒளிவட்டம்’ (22-Degree Halo) என்று அழைக்கப்படுகிறது. வளிமண்டலத்தின் மிக உயரமான அடுக்கில் காணப்படும் ‘சிரஸ்’ (Cirrus) வகை மேகங்களில் உள்ள கோடிக்கணக்கான மிகச்சிறிய அறுகோண வடிவ பனிப்படிகங்கள் மீது சூரிய ஒளி படும்போது இந்த ஒளிவட்டம் உருவாகிறது.
இந்த பனிப்படிகங்கள் சிறிய முப்பட்டகங்களைப்போல செயல்பட்டு, சூரிய ஒளியை 22 டிகிரி கோணத்தில் ஒளிவிலகல் (Refraction) அடையச் செய்வதால், சூரியனைச் சுற்றி முழுமையான பிரம்மாண்ட வளையம் போன்ற தோற்றம் ஏற்படுகிறது. புதுச்சேரி நகரப் பகுதிகளில் இந்த அரிய வானியல் காட்சியைப் பார்த்த பொதுமக்கள், அதனை புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

