புதுச்சேரியில் முன்னறிவிப்பின்றி சிவப்பு குடும்ப அட்டை மஞ்சளாக மாற்றம்: எம்.எல்.ஏ. நேரு குற்றச்சாட்டு!

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுமக்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சிவப்பு நிற குடும்ப அட்டைகள் (வறுமைக் கோட்டிற்கு கீழ்) திடீரென மஞ்சள் நிற அட்டைகளாக மாற்றப்பட்டு வருவதாக உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி. நேரு குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலமாக வழங்கப்படும் குடும்ப அட்டைகளில், ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு நிற கார்டுகள் தன்னிச்சையாக மஞ்சள் நிற கார்டுகளாக தரம் குறைக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசிய எம்.எல்.ஏ. நேரு, சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய தகவல் அல்லது விளக்கம் அளிக்காமலும், எந்தவொரு நேரடி கள ஆய்வும் மேற்கொள்ளாமலும் அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது என்றார்.
சிவப்பு குடும்ப அட்டை மூலமாக அரசு வழங்கும் இலவச அரிசி, நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு சலுகைகள் ஏழை எளிய மக்களுக்கு கிடைத்து வருகின்றன. தற்போது எவ்வித காரணமும் இன்றி கார்டுகள் மஞ்சள் நிறமாக மாற்றப்படுவதால் ஏழை மக்கள் அரசு உதவிகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிமைப்பொருள் வழங்கல் துறை உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தகுதியுள்ள ஏழை மக்களின் சிவப்பு குடும்ப அட்டைகள் மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் சிவப்பு அட்டைகளை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

