புதுச்சேரி

கடல் வழி போதைப்பொருள் கடத்தலை தடுக்க புதிய கடலோர தடுப்புப் பிரிவுகள்: சீனியர் எஸ்.பி. தீபிகா அதிரடி தகவல்!

புதுச்சேரி, அக். 22:
புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில் கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தை அடியோடு ஒழிக்கும் நோக்கில் புதிய ‘கடலோர போதைப்பொருள் தடுப்புப் பிரிவுகள்’ அமைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சீனியர் எஸ்.பி. தீபிகா தெரிவித்துள்ளார்.

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற ரூ.6.08 கோடி மதிப்பிலான 7.605 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோன்று தமிழகத்தின் நாகப்பட்டினத்திலும் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பெட்டமைன் சர்வதேச போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில், சாலை மற்றும் வான்வழியாக போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்காணிக்க தனிப் பிரிவுகள் இயங்கி வந்தாலும், கடல் வழியாக நடக்கும் கடத்தலை முறியடிக்க போதிய கட்டமைப்பு இல்லாமல் இருந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு, புதுவை யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி, மாகி மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி கடலோர காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை ஒருங்கிணைத்து இந்த சிறப்பு தடுப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் தங்களின் வழக்கமான ரோந்து பணிகளுடன் சேர்த்து, கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது மற்றும் கடலோர கிராமங்களில் போதை விநியோகம் செய்யப்படுவது குறித்த உளவுத் தகவல்களைத் திரட்டுவர். மேலும், கடலோரக் கிராம மக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு பணிகளையும் இவர்கள் முன்னெடுப்பார்கள் என சீனியர் எஸ்.பி. தீபிகா விளக்கம் அளித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன