சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சதுர்த்தி: விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார் முதல்வர் ரங்கசாமி!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு விழிப்புணர்வுக் குறும்படத்தை மாண்புமிகு முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்கள் வெளியிட்டார்.
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது நீர்நிலைகளில் சிலைகள் கரைக்கப்படும் சூழலில், அவற்றுடன் சேர்த்து பிளாஸ்டிக் பைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் பூஜை கழிவுகளும் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் கடுமையாக மாசடைகின்றன. இதனைத் தடுக்கும் நோக்கில், சிலை கரைப்புக்கு முன்பாக அலங்காரப் பொருட்களை முறையாகப் பிரித்து அகற்றுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமம் 4 நிமிட விழிப்புணர்வுக் குறும்படத்தைத் தயாரித்துள்ளது.
முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுற்றுச்சூழல் துறை செயலர் திருமதி ஸ்மிதா இ.ஆ.ப., புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழும உறுப்பினர் செயலர் என். ரமேஷ் மற்றும் சுற்றுச்சூழல் துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இக்குறும்படமானது புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமத்தின் நடமாடும் எல்.இ.டி (LED) வாகனங்கள் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களின் பல்வேறு முக்கியப் பொது இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காகத் திரையிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
