அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தல்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நடப்பாண்டிற்கான விவசாய கடன்களை சிறு, குறு மற்றும் பெரும் விவசாயிகள் என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், மாநிலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகளைப் பாதுகாக்க அரசு உடனடி நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். குறிப்பாக, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள நடப்பாண்டு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிடும் போது, நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு சிறு, குறு, பெரும் விவசாயிகள் என்று பிரித்து பாரபட்சம் காட்டக்கூடாது எனவும், வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான கடன் தள்ளுபடி பலன்கள் சென்றடையும் வகையில் அரசு விரிவான திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் அவர் அவையில் கோரிக்கை விடுத்தார்.
