புதுச்சேரியில் கைலாசா தியானபீட கும்பாபிஷேகம்: முதல்வர் ரங்கசாமியிடம் பாதுகாப்பு கோரிய நித்யானந்தா சீடர்கள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நித்யானந்தாவின் கைலாசா தியானபீட கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி அவரது பிரதிநிதிகள் முதலமைச்சர் என்.ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரி பகுதியில் கைலாசா தியானபீடத்திற்கான கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், விரைவில் தியானபீடத்தின் மகா கும்பாபிஷேக விழாவை விமரிசையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி விழாவிற்குத் தேவையான உரிய பாதுகாப்பு மற்றும் வசதிகளை செய்து தர வேண்டும் என முதல்வரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச அளவில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வரும் நித்யானந்தா தரப்பினர், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள இச்சம்பவம் அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
