புதுச்சேரி நாட்டிய சாஸ்திராலயா புதிய சாதனை முயற்சி: கவிழ்த்த மண்பானை மீது நின்று பரதநாட்டியம் ஆட திட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரி நாட்டிய சாஸ்திராலயா இசை மற்றும் நடன அகாடமி (Natya Sasthralaya Music and Dance Academy) சார்பில், தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்ட மண்பானைகள் மீது நின்றபடி அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடி ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ (India Book of Records) சாதனை படைக்கும் பிரம்மாண்ட முயற்சி நடைபெற உள்ளது.
பாரம்பரிய கலை வடிவமான பரதநாட்டியத்தை புதிய சவாலுடன் வெளிப்படுத்தும் நோக்கில் இந்த வரலாற்று சாதனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நாட்டிய சாஸ்திராலயா அகாடமியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கவிழ்க்கப்பட்ட மண்பானைகள் மீது தங்கள் உடலின் சமநிலையைக் கையாண்டு நளினமான நாட்டிய அடவுகளை ஒருங்கிணைந்து ஆடப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இளம் கலைஞர்களின் உடல் சமநிலை, தீவிர கவனம் மற்றும் பரதநாட்டிய கலை நேர்த்தியை பறைசாற்றும் வகையில் அமையவுள்ள இந்த சாதனை முயற்சி புதுச்சேரி கலை உலகிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி மாணவக் கலைஞர்களின் இந்த சாதனை முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
