புதுச்சேரி சென்டாக்: நீட் இளநிலை 3-ஆம் கட்ட வரைவு இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி, 11/10/2024: புதுச்சேரி அரசு உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் மத்திய சேர்க்கைக் குழு (சென்டாக்), 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான நீட் அடிப்படையிலான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட வரைவு இடஒதுக்கீடு பட்டியலை (Draft Allotment List) வெளியிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.ஏ.எம்.எஸ் மற்றும் பி.வி.எஸ்.சி & ஏ.எச் ஆகிய படிப்புகளுக்கு அரசு, நிர்வாகம், தெலுங்கு சிறுபான்மையினர் மற்றும் என்.ஆர்.ஐ பிரிவுகளின் கீழ் இந்த இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்டாக் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்தம் உள்ள 1,285 இடங்களில் 1,196 இடங்கள் மூன்றாம் சுற்றில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் 429 இடங்களும் முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் 427 இடங்களில் 407 இடங்களும், என்.ஆர்.ஐ பிரிவில் 43 இடங்களும், தெலுங்கு சிறுபான்மையினர் பிரிவில் 4 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. பி.டி.எஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 120 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 129 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் (BAMS) 32 இடங்களும், கால்நடை மருத்துவப் படிப்பில் (BVSc & AH) சுயநிதி மற்றும் என்.ஆர்.ஐ பிரிவுகளில் 32 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக, அரசு ஒதுக்கீட்டு 4 இடங்களுக்கான சேர்க்கை நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது எனவும், விளையாட்டு வீரர்களுக்கான (MSP) ஒதுக்கீட்டில் 1 இடம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைவு ஒதுக்கீடு பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது புகார்கள் இருந்தால், மாணவர்கள் தங்களின் லாகின் போர்ட்டல் மூலம் அக்டோபர் 12-ஆம் தேதி காலை 11.00 மணிக்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் இறுதி தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.


