புதுச்சேரி

புதுச்சேரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பைக் பேரணி: துணைநிலை ஆளுநர், முதல்வர் கொடியசைத்து தொடக்கம்!

புதுச்சேரி:

புதுச்சேரி காவல்துறையின் சார்பில் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “போதைப்பொருட்களுக்கு எதிராக தேசத்திற்காகப் பயணிப்போம்” என்ற தலைப்பில் மாபெரும் மோட்டார் சைக்கிள் (பைக்) பேரணி எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ந. ரங்கசாமி, சட்டப்பேரவை சபாநாயகர் அன்பழகன், உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) ஷாலினி சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தனர். இந்த விழிப்புணர்வுப் பேரணியில் ஏராளமான காவலர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பங்கேற்றனர்.

இளைஞர்கள் மற்றும் மாணவ சமுதாயத்தைப் போதைப்பொருட்களின் கோரப்பிடியில் இருந்து பாதுகாக்கவும், போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கவும் புதுச்சேரி அரசு மற்றும் காவல்துறை பல்வேறு தொடர் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. சமூகத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்த கூட்டுப் பொறுப்புணர்வை வளர்ப்பதே இந்த விழிப்புணர்வுப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என்று இந்நிகழ்வின் போது வலியுறுத்தப்பட்டது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை தொடர்ந்து தீவிர கள நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது முதுநிலை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாய்ந்து வரும் சூழலில், தற்போது போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளும் மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன