ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு பழம் கொடுத்து பாராட்டு: புதுச்சேரி போக்குவரத்து காவல் துறை விழிப்புணர்வு
இருசக்கர வாகன விபத்துகளைக் குறைக்கும் வகையில், புதுச்சேரி போக்குவரத்து காவல் துறை வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. முருகா திரையரங்கம் அருகே உள்ள ராஜீவ் காந்தி சிலை பகுதியில், ஹெல்மெட் அணிந்து சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளையும், சீட் பெல்ட் அணிந்து பயணித்த கார் ஓட்டிகளையும் நிறுத்திய காவலர்கள், தர்பூசணி, அன்னாசி உள்ளிட்ட பழங்களை வழங்கிப் பாராட்டினர். பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது தொடர்வதால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஹெல்மெட்டும் சீட் பெல்ட்டும் அபராதத்தைத் தவிர்ப்பதற்காக மட்டுமல்ல, உயிரைக் காக்கும் முக்கியப் பாதுகாப்பு நடவடிக்கை என்று காவல் துறையினர் எடுத்துரைத்தனர். அதிவேகம், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துதல், போக்குவரத்து விதிமீறல் ஆகியவற்றைத் தவிர்த்து சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.