புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகள்

புதுச்சேரி, ஆக. 24: புதுச்சேரி 16-வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் அவர்களின் உரையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடரில், துணைநிலை ஆளுநர் திருக்குறள் வாசித்து தனது உரையைத் தொடங்கிவைத்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதுச்சேரியின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியாயின. முக்கியமாக, மகளிர் உதவித்தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை திட்டத்தில் புதிதாக 15,000 பேர் இணைக்கப்பட உள்ளனர். பொருளாதார ரீதியாக, புதுச்சேரியின் வளர்ச்சி விகிதம் 8.12 சதவீதமாக உயர்ந்துள்ளதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

காரைக்கால் கடற்கரை மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, உழவர்கரை மற்றும் தட்டாஞ்சாவடியில் ஐடி மற்றும் பல்நோக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களை (SEZ) அமைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2047-க்குள் தன்னிறைவு பெற்ற புதுச்சேரியை உருவாக்குவதே இலக்கு என அரசு உறுதி அளித்துள்ளது. ஆளுநர் உரையைத் தொடர்ந்து, பேரவை நடவடிக்கைகள் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பின்னர், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன