புதுச்சேரியில் ரூ.468 கோடியில் காவல் துறை நவீனமயமாக்கல்: முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு
புதுச்சேரி, ஆக. 24: புதுச்சேரி மாநிலத்தின் உட்கட்டமைப்பு மற்றும் காவல் துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையின்போது இதனை அறிவித்த அவர், புதுச்சேரி காவல் துறையை நவீனப்படுத்த ரூ.468 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் காலியாக உள்ள 1007 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், இதற்காக மத்திய அரசு ரூ.50 கோடி நிதி உதவி வழங்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும், காவல் நிலையங்களின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பெரிய கடை காவல் நிலையம் மறுசீரமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் பொது சுகாதாரம் சார்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பாகூரில் ரூ.9 கோடியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையமும், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கலைக் கல்லூரியில் ரூ.16 கோடியில் நிர்வாகக் கட்டிடமும் கட்டப்படவுள்ளது. அதேபோல், காரைக்கால் அவ்வையார் அரசு கல்லூரியில் ரூ.10 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் குடிநீர் வசதி மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, சங்கராபரணி ஆற்றைச் சீரமைத்து ஏரிகளை மேம்படுத்த ரூ.497 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், உப்பளம், காமராஜர் நகர் மற்றும் நெல்லித்தோப்பு பகுதிகளில் ரூ.92 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படும்.
புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் ரூ.60 கோடி செலவில் புதிதாகக் கட்டப்படும் மற்றும் கடற்கரைச் சாலை ரூ.26 கோடியில் அழகுபடுத்தப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.