புதுச்சேரி மாநில பாஜக புதிய பொறுப்பாளராக கே.சுரேந்திரன் நியமனம்!

புதுச்சேரி: பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநில புதிய பொறுப்பாளராக, அக்கட்சியின் தேசிய செயலாளரும் கேரள மாநில முன்னாள் பாஜக தலைவருமான கே.சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநில பாஜக தலைவராக நீண்ட காலம் பணியாற்றி கட்சியை வழிநடத்திய விரிவான கள அனுபவம் கொண்ட கே.சுரேந்திரன், தற்போது பாஜகவின் தேசிய செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கட்சிக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தவும், கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் அவரை புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளராக பாஜக தேசிய தலைமை நியமித்துள்ளது.
புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.சுரேந்திரனுக்கு புதுச்சேரி மாநில பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவரது திறம்பட வழிகாட்டுதலிலும், அனுபவமிக்க தலைமையிலும் புதுச்சேரி மாநில பாஜக மேலும் வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போடும் என கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



