புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்: கூட்ட அரங்கில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் நேரில் ஆய்வு!

புதுச்சேரி: புதுச்சேரி 16-வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதை முன்னிட்டு, சட்டமன்ற கூட்ட அரங்கில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை தற்காலிக சபாநாயகர் ஏ.அன்பழகன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
16-வது புதுச்சேரி சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டம் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. அன்றைய தினம் காலை மேதகு துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் அவையில் தொடக்க உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து மதியம் 3 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்.ரங்கசாமி 2026-2027-ம் ஆண்டுக்கான ரூ.14,100 கோடி மதிப்பிலான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
துணைநிலை ஆளுநர் உரை மற்றும் முதல்வரின் பட்ஜெட் உரை ஆகியவை பொதுமக்களுக்காக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. இதனை முன்னிட்டு, சட்டப்பேரவை செயலர் தயாளனுடன் இணைந்து கூட்ட அரங்கினை ஆய்வு செய்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கை அமைப்பு, ஒலிபெருக்கி, டேப்லெட் மற்றும் ஏசி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முறையாக செயல்படுவதை உறுதிசெய்து தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

