ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் மாணவர் உயிரிழப்பு: கண்களைத் தானம் செய்த பெற்றோர்
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில், உடற்தகுதித் தேர்வின்போது கல்லூரி மாணவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இம்முகாம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலத்தைச் சேர்ந்த கோகுல் (20) என்பவரே உயிரிழந்தவர். ராணுவ வீரராக வேண்டும் என்ற நோக்கத்துடன் கடுமையாகப் பயிற்சி எடுத்து வந்த அவரது மரணம், குடும்பத்தினரையும் நண்பர்களையும் முகாமில் இருந்த மற்ற இளைஞர்களையும் கவலையில் ஆழ்த்தியது.
இந்நிலையில், கோகுலின் கண்களைத் தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளைத் தலைவர் மருத்துவர் லட்சுமிபதி தலைமையில், நிர்வாகக் குழு உறுப்பினர் அய்யனார் முன்னிலையில், ஆயுட்கால உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவரின் கண்களைத் தானமாகப் பெற்றுக் கொண்டனர்.


