புதுச்சேரி தேர்தல் முடிந்த பிறகு புதிய அரசியல் மாற்றம் வரும்: திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி பேச்சு!

புதுச்சேரி: தேர்தல் முடிந்த பிறகு புதுச்சேரியில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்று திமுக தேர்தல் பொறுப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அனைத்து 30 தொகுதிகளிலும் முழுவீச்சில் தேர்தல் பணியாற்றியது. ஆனால், கூட்டணியில் இருந்தவர்கள் சரிவர தேர்தல் பணி செய்யவில்லை. புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தினோம். ஆனால் கூட்டணி தர்மத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தலைவர் கூறினார். ஒருவேளை திமுக தனித்துப் போட்டியிட்டிருந்தால் 25 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் வெற்றி பெற்றிருக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தட்டாஞ்சாவடி தேர்தல் மிகவும் முக்கியமானது. மக்களுக்காகப் போராடி 57 முறை சிறை சென்ற தியாக உள்ளம் கொண்டவர் சேதுசெல்வம். அவரை வெற்றிபெற வைத்தால் புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என திமுக தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், அரசு மருந்து கொள்முதலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தமிழ் பேசுகிறோம் என்பதற்காகவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுக்கின்றனர். தேர்தல் முடிந்த பிறகு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநில அந்தஸ்துக்கான தீவிர போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.