அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து தலைமையில் நலத்துறை பணிகள் ஆய்வுக் கூட்டம்: எம்.எல்.ஏ டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் பங்கேற்பு!

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு அமைச்சர் திரு. வி.பி. சிவக்கொழுந்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காரைக்கால் நிரவி–திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. TKSM மீனாட்சிசுந்தரம் கலந்து கொண்டு, தொகுதி மக்களின் நலன்கள் மற்றும் நலத்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
அமைச்சர் வி.பி. சிவக்கொழுந்து அவர்கள் பொறுப்பு வகிக்கும் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய 5 முக்கிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கேட்டறியப்பட்டது. அத்துறைகளின் உயர் அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டு தற்போதைய களநிலவரங்களை விளக்கினர்.
கூட்டத்தில், பொதுமக்களுக்கு குடிமைப் பொருள் வழங்கல் துறையின் மூலம் சென்று சேர வேண்டிய அத்தியாவசிய சேவைகள், சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும் தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக நிரவி–திருப்பட்டினம் தொகுதி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் மக்களின் அடிப்படைத் தேவைகள், நலத்திட்ட விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்ந்த நலத்திட்டங்களை விரைந்து பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் பொதுமக்களுக்கான அரசு சேவைகளை எவ்வித சுணக்கமும் இன்றி முழுவீச்சில் செயல்படுத்தவும், துறை சார்ந்த திட்டங்களை விரைவுபடுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு இக்கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.


