புதுச்சேரி

ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைக்காதவர்களுக்கு மானியம் நிறுத்தம்: புதுச்சேரி அரசு எச்சரிக்கை

புதுச்சேரி, ஆக. 18: புதுச்சேரியில் ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத மற்றும் இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பை முடிக்காத பயனாளிகளுக்கு, மாதாந்திர மானிய உதவித்தொகை நிறுத்தப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தகுதியுள்ள அனைத்து அட்டைதாரர்களும் உடனடியாக தங்கள் விவரங்களைப் புதுப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி 26, 2026 முதல் மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறை (CBDC) அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களில் சுமார் 1.6 லட்சம் பயனாளிகள் தங்கள் கைப்பேசி எண்களை நியாயவிலைக் கடைகள் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் 1.02 லட்சம் பேருக்கு ஜூன் மாதத்திற்கான உணவு தானிய மானியம் டிஜிட்டல் வாலட் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்னும் தங்களின் கைப்பேசி எண்களை இணைக்காத அட்டைதாரர்கள் வரும் ஆகஸ்ட் 21, 2026-க்குள் அந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் இணைப்பு மற்றும் சரிபார்ப்பை நிறைவு செய்யாதவர்களின் ரேஷன் அட்டைகளுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட மானிய விலைப் பொருட்கள் வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன