ஜிப்மர் மகப்பேறு சேவைக்கு தொடர்ந்து 2வது ஆண்டாக பிளாட்டினம் சான்றிதழ்
புதுச்சேரி ஜிப்மர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மகப்பேறு சேவைகளுக்கு, மத்திய அரசின் ‘லக்ஷ்யா’ திட்டத்தின் கீழ் மிக உயரிய பிளாட்டினம் சான்றிதழ் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வழங்கப்பட்டுள்ளது.
பிரசவ அறை மதிப்பீட்டில் 99.5 சதவீதமும், மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்குகள் மதிப்பீட்டில் 98.5 சதவீதமும் புள்ளிகள் பெற்று, தரமான சிகிச்சை, தாய்-சேய் பாதுகாப்பு, சுகாதாரம், அவசரகால மேலாண்மை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் ஜிப்மருக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய தர உத்தரவாத தரநிலைகளின் (NQAS) கீழ் நடைபெறும் மதிப்பீட்டில் 90 சதவீதத்திற்கு மேல் பெறும் மருத்துவமனைகளுக்கே பிளாட்டினம் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களின் ஒருங்கிணைந்த பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருது பார்க்கப்படுகிறது. கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்குப் பாதுகாப்பான, தரமான மகப்பேறு சிகிச்சை வழங்குவதில் ஜிப்மர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
