புதுச்சேரி

தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி உருக்கமான இரங்கல்

புதுச்சேரி, 11/9/2026: முதுபெரும் தமிழறிஞரும், உலகத் தமிழர்களால் போற்றப்படும் பட்டிமன்ற நடுவருமான முனைவர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவிற்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “முதுபெரும் தமிழறிஞரும், உலகெங்கும் வாழும் தமிழர்களால் பாராட்டப்பட்ட பட்டிமன்றப் பேச்சாளரும் நடுவருமான திரு. சாலமன் பாப்பையா அவர்கள் உடல்நலக்குறைவால் தமது 90-வது வயதில் காலமான செய்தி மிகுந்த பேரதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ் பேராசிரியராகப் பணியாற்றி, நகைச்சுவை உணர்வோடும் எளிய நடையிலும் கருத்துகளை பாமர மக்களிடமும் கொண்டு சேர்த்த தனிப்பெரும் ஆளுமை அவர் ஆவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பண்டிகைக் காலங்களில் அவரது பட்டிமன்றங்களை தாம் தொடர்ந்து கண்டு ரசித்த நினைவுகளையும், அவரது சீரிய தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ள நாராயணசாமி, கூடங்குளம் அணுமின் நிலைய விழிப்புணர்வு நிகழ்வின் போது மதுரையில் சாலமன் பாப்பையா நேரில் வந்து தன்னை வாழ்த்தி ஆசீர்வதித்த நிகழ்வையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். அவரது மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் எனத் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன