தமிழ்நாடு

திமுக மாவட்டங்கள் 77-லிருந்து 110-ஆக அதிகரிப்பு: மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை, ஆக. 28:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் தற்போதுள்ள திமுக மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை 77-லிருந்து 110-ஆக அதிகரிக்கப்படுவதாகக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் 16-ஆவது உட்கட்சி அமைப்புத் தேர்தலை முன்னிட்டு நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கழக மறுசீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகள் மற்றும் முன்னணியினருடனான ஆலோசனையின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டிருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனியாக ஒரு மாவட்டக் கழகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 110 மாவட்டக் கழகங்களில், தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்கள் தலைமைக் கழகப் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயற்குழுத் தீர்மானங்கள் மற்றும் மறுசீரமைப்புக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன