தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: பாக்கம்முடையான்பட்டு வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் சேது செல்வம் வாக்களித்தார்!
புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திமுக வேட்பாளர் சேது செல்வம் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பாக்கம்முடையான்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கிளை நூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு இன்று காலை திமுக வேட்பாளர் சேது செல்வம் வருகை தந்தார். தொடர்ந்து தனது அடையாள ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் காண்பித்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது ஜனநாயகக் கடமையை உற்சாகத்துடன் ஆற்றினார்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் காலை முதலே வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தொகுதி முழுவதும் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, இத்தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், லாஸ்பேட்டை குளூனி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தியிருந்தார். மேலும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி காலை 9:00 மணி நிலவரப்படி இத்தொகுதியில் 19.20 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது வாக்குப்பதிவு மேலும் விறுவிறுப்படைந்துள்ளது.
