லண்டன் முருகன் கோயில் அர்ச்சகரின் சஷ்டியப்தபூர்த்தி விழா: தருமபுர ஆதீனம் நூல் வெளியீடு!

லண்டன் ஸ்ரீ முருகன் கோயில் தலைமை அர்ச்சகர் சிவஸ்ரீ எம். சந்தானசிவம் – எஸ். ராஜேஸ்வரி தம்பதியரின் சஷ்டியப்தபூர்த்தி (60-ம் ஆண்டு மணிவிழா) சாந்தி விழாவை முன்னிட்டு, தருமபுர ஆதீனம் சார்பில் சிறப்பு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு ஆன்மிக நூல் வெளியிடப்பட்டது.
இவ்விழாவின் ஒரு பகுதியாக, சிவஸ்ரீ விஜய சோமசேகர சிவாச்சாரியார் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘சண்டீ ஸஹஸ்ரநாம சங்கிரஹம்’ என்ற சிறப்பு ஆன்மிக நூலினை தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் வெளியிட்டார். இந்த நூலின் முதல் பிரதியை பிரபல ஆன்மிகப் பெரியவரும், மூத்த சிவாச்சாரியாருமான சிவஸ்ரீ பிச்சைக்குருக்கள் பெற்றுக்கொண்டார்.
லண்டனில் பல ஆண்டுகளாக ஆன்மிக மற்றும் இறைப்பணிகளை ஆற்றி வரும் சந்தானசிவம் சிவாச்சாரியார் தம்பதியருக்கு தருமபுர ஆதீனம் பிரசாதங்கள் வழங்கி ஆசி வழங்கினார். இந்நிகழ்வில் ஆன்மிகப் பிரமுகர்கள், சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு தம்பதியருக்கு தங்களது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


