காட்டேரிக்குப்பம் கோயில்கள் மகா கும்பாபிஷேகம்: அமைச்சர் நமச்சிவாயம் சுவாமி தரிசனம்!

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட காட்டேரிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் மாநில உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
காட்டேரிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொய்யா விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ மாம்பாத்த ஐயனாரப்பன் ஆலயங்களின் திருப்பணிகள் அண்மையில் முடிவுற்றன. இதையடுத்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்று, கோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கலந்துகொண்டு சுவாமிக்கு நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் பங்கேற்று தரிசனம் செய்தார். அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள்முருகன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் திரளான கிராம மக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அருள் பெற்றனர்.


