பிரதமர் மோடி பிறந்தநாள்: வடசென்னையில் பாஜக சார்பில் மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
சென்னை, செப். 17:
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை மேற்கு மாவட்டம் பாஜக சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் உற்சாகமாக நடைபெற்றன. வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
முன்னதாக, முத்தமிழ் நகரில் அமைந்துள்ள பவானி அம்மன் திருக்கோவிலில் பிரதமர் மோடியின் நீண்ட ஆயுள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புப் பிரார்த்தனை மற்றும் இறை தரிசனம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்தின் அருகே பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலத் துணைத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



