ரூ.9 கோடியில் சிவகங்கை கட்டிக்குளம் கண்மாய் தூர்வாரும் பணி தீவிரம்: 10 கிராம விவசாயிகள் மகிழ்ச்சி!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவு கொண்ட கட்டிக்குளம் கண்மாயை தூர்வாரும் பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N.ஆனந்த் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின்படி விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்டுள்ளன.
இக்கண்மாய் மூலம் மானாமதுரை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். கண்மாயை முழுமையாக தூர்வாரி, அதன் நீர்ப்பிடிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்று, சோஹோ (Zoho) நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பங்களிப்பு (CSR) நிதி மூலம் சுமார் ரூ.9 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பணிகளின் தரத்தை உறுதிப்படுத்த ட்ரோன் (Drone) தொழில்நுட்பம் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சோஹோ நிறுவனத்தின் ரூ.5 கோடி சிஎஸ்ஆர் நிதியில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பல்வேறு முக்கிய ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. தற்போது கட்டிக்குளம் கண்மாய் புனரமைக்கப்படுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, விவசாயிகளின் பாசனத் தேவையும் முழுமையாகப் பூர்த்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



