காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் கனகலட்சுமிக்கு தங்கம்
காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை கனகலட்சுமி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில், மூத்தோர் மகளிர் ஃபாயில் பிரிவில் கனகலட்சுமி சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அவர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அதே பிரிவில் இந்தியாவின் ஜாய்ஸ் அஷிதா வெள்ளிப் பதக்கம் வென்றார்; இங்கிலாந்து வீராங்கனைகள் ஜார்ஜியா கிரீன் மற்றும் எமிலி குட்சைல்ட் வெண்கலப் பதக்கங்களை பகிர்ந்துகொண்டனர்.
தனிநபர் பிரிவு போட்டிகளின் மூன்றாவது நாளில் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றது. கனகலட்சுமியின் தங்கத்துடன், ஆண்கள் எபே பிரிவில் ராஜேந்திரன் சாந்திமோல் ஷெர்ஜின் மற்றும் ஆண்கள் சேபர் பிரிவில் கரண் சிங் ஆகியோரும் தங்கம் வென்றனர்.
போட்டி நிறைவில் இந்திய அணி 13 தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. காமன்வெல்த் வாள்வீச்சு கூட்டமைப்பு வழங்கும் மதிப்புமிக்க வில்கின்சன் சுவார்டு டிராபியையும் இந்தியா கைப்பற்றியது.
