சுதந்திர தினம்: முதல்வர் ரங்கசாமி கொடியேற்றம்

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசியக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நாட்டின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரியின் முன்னேற்றம், மக்களின் நலன் மற்றும் நாட்டின் ஒற்றுமைக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்தியா இன்று தனது 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.
80-வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில், முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின உரை
80-வது சுதந்திர தின விழாவையொட்டி புதுச்சேரியில் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் என். ரங்கசாமி, மகளிர் நலன், உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், சாலை மற்றும் போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், தொழில் வளர்ச்சி, மீனவர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.
பெண்களுக்கு மாதம் ₹2,500 நிதியுதவி
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர நிதியுதவி ₹1,000-ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். 2026 ஜனவரி முதல் உயர்த்தப்பட்ட இந்த நிதியுதவியின் மூலம் சுமார் 65,000 குடும்பத் தலைவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், பெண்கள், திருமணமாகாத பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவித் திட்டத்தின் கீழ் 1,96,616 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ₹676 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
அங்கன்வாடி மூலம் ஊட்டச்சத்து உணவு
அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகள், காப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆறு மாதம் முதல் குறிப்பிட்ட வயது வரையிலான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆண்டின் 365 நாட்களிலும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுவதாகவும், இதன்மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்கள் பயன்பெற்று வருவதாகவும் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் திட்டம் – 6.33 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் PHH மற்றும் AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி உள்ளிட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அரசு தொடர்ந்து நிதி ஒதுக்கி வருகிறது. இதற்காக ₹16.23 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 6,33,912 பயனாளிகள் பயன்பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும், பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை எளிதாக வழங்கும் வகையில் இணையவழி சேவைகள் மற்றும் டிஜிட்டல் வசதிகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ₹483.51 கோடி
புதுச்சேரியின் சாலை மற்றும் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த ₹483.51 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் மேம்பாட்டுப் பணிகளுக்காக மட்டும் ₹25.03 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கிய சாலைகளின் மேம்பாடு, மழைக்கால பாதிப்புகளைத் தவிர்ப்பது, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குடிநீர் திட்டங்களுக்கு ₹51.87 கோடி
முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் குடிநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு ₹51.87 கோடி செலவில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், 1 MLD திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது; பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் குடிநீர் கட்டமைப்பு தொடர்பான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரிய மின் திட்டத்தில் 4,896 வீடுகள்
வீடுகளில் சூரிய மின் உற்பத்தி பேனல்கள் அமைப்பதற்கான திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சூரிய வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் வீடுகளில் சூரிய மின் உற்பத்தி பேனல்கள் அமைக்க ₹78,000 வரை மத்திய அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதுவரை புதுச்சேரியில் 4,896 வீடுகளில் சூரிய மின் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ₹31.57 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். புதுச்சேரியின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல், மின் கட்டமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுச்சேரிக்கு 75 மின்சார பேருந்துகள்
பிரதமரின் PM e-Bus Sewa திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு 75 மின்சார பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 15 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரியின் பொதுப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அரசின் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக போக்குவரத்துத் துறைக்கு வருவாய் அதிகரித்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தொழில் வளர்ச்சிக்கு ₹4,750 கோடி கடனுதவி
புதுச்சேரியில் தொழில் வளர்ச்சியை அதிகரித்து, புதிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ₹4,750 கோடி கடனுதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய தொழில் நிறுவனங்களை புதுச்சேரிக்கு ஈர்ப்பதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழில் கொள்கை மற்றும் தொழில் தொடங்குவதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். MSME மற்றும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது; பல்வேறு தொழில் திட்டங்களின் கீழ் 37 பயனாளிகளுக்கு ₹8.11 கோடி அளவிலும், காரைக்காலில் 5 பயனாளிகளுக்கு ₹70 லட்சம் அளவிலும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கான அரசின் சேவைகளை எளிதாக்கும் வகையில் ஒற்றைச் சாளர முறையும் (Single Window System) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்வித்துறையில் தேசிய அளவில் புதுச்சேரிக்கு பெருமை
2025-26ஆம் ஆண்டில் புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக புதுச்சேரியைச் சேர்ந்த 13 பள்ளிகள் தேசிய அளவிலான தரவரிசையில் இடம்பெற்றுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், உயர்கல்விக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் பிற கல்வி வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
சுகாதாரம், மீனவர் நலன், நில அளவீடு
அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்கவும் புதிய மருத்துவ உபகரணங்கள், சிறப்பு சிகிச்சை வசதிகள் மற்றும் மருத்துவமனை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீன்பிடி உபகரணங்கள், பயிற்சிகள், கடற்கரை உள்கட்டமைப்பு மற்றும் மீனவர்களின் வருமானத்தை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது; புதுச்சேரியின் நீர்வழிப் பாதைகள் மற்றும் கடல்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான Waterways Master Plan தயாரிக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். நிலப்பதிவுகள் மற்றும் நில அளவீட்டு முறைகளை நவீனமயமாக்கும் பணிகளின் ஒரு பகுதியாக, Drone Survey மற்றும் Large Scale Mapping போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நில அளவீடு மற்றும் பதிவுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை நவீனமயமாக்கல் மற்றும் அடுத்த கட்ட வளர்ச்சி
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குடிநீர், குப்பை அகற்றுதல், புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்பு, மழைக்காலத்தில் வெள்ளநீர் தேங்குவதைத் தடுப்பது போன்ற பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சாலை, குடிநீர், மின்சாரம், தொழில், கல்வி, சுகாதாரம், மீன்வளம், போக்குவரத்து, சுற்றுலா உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் திட்டங்களை வேகப்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கம் என முதலமைச்சர் ரங்கசாமி தனது சுதந்திர தின உரையில் வலியுறுத்தினார். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, வளர்ச்சியடைந்த புதுச்சேரியை உருவாக்க அரசு தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியையும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

