சுதந்திர தினம்: சென்னையில் தேசியக் கொடியேற்றிய முதலமைச்சர் விஜய்

நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் நாளை தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இந்த விழாவில் முப்படை மற்றும் காவல் துறையினரின் கம்பீர அணிவகுப்பு நடைபெற உள்ள நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, சுதந்திர தினத்தை முன்னிட்டு மிகச் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த 20 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புலன் விசாரணை பணியில் சிறந்து விளங்கிய தமிழக காவல் துறையின் 15 அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
In brief (English)
The Tamil Nadu Chief Minister will unfurl the national flag at Fort St. George with a deployment of one lakh police personnel across the state.
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சென்னையில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து செய்தி வெளியிட்டார்.
தாய்நாட்டின் விடுதலைக்காக தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளையும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாமல் போராடிய தேசத் தலைவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்வதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டுக்கு தனித்துவமான இடம் இருப்பதாகவும், அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான வீர உணர்வும் விடுதலை வேட்கையும் தமிழ் மண்ணில் வலிமை பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
தியாகிகளின் கனவுகளை நனவாக்கும் வகையில், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பேணிக்காக்க வேண்டும் என்றும், சமத்துவம், சமூகநீதி மற்றும் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.




