அமைச்சர் தொடர்பான வழக்கு விசாரணை: புதுச்சேரி நீதிமன்றம் செப்டம்பர் 11-க்கு ஒத்திவைப்பு!
புதுச்சேரி:
தமிழக அமைச்சர் மரிய வில்சன் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றம் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு வெளியிட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட தரப்பில் அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் பிரவீன் நேரில் ஆஜராகி விரிவான வாதங்களை முன்வைத்தார்.
இதுகுறித்து வழக்கறிஞர் பிரவீன் தெரிவிக்கையில், இந்த விவகாரமானது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வராது என்பதை விளக்கும் வகையிலான விரிவான வாதங்களையும், அதற்கான உரிய ஆவண ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகக் கூறினார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

