கடல்சார் கண்காணிப்புக்கு 2 அதிநவீன ட்ரோன்கள் குத்தகை
இந்திய கடற்படைக்காக, அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து இரண்டு எம்.க்யூ-9பி ‘சீ கார்டியன்’ அதிநவீன ட்ரோன்களை 30 மாதங்களுக்கு குத்தகைக்கு எடுக்க மத்திய பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.1,943 கோடி என பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதில் இரண்டு உயர் உயரம், நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்ட தொலைநிலை இயக்கப்படும் விமான அமைப்புகள் (HALE RPAS) கடற்படைக்கு வழங்கப்பட உள்ளன.
மேம்பட்ட சென்சார்கள் மற்றும் கண்காணிப்புக் கருவிகளுடன் கூடிய இந்த ட்ரோன்கள், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் கண்காணிப்பு, உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை வலுப்படுத்தும். பெரிய கடற்பரப்பில் நீண்ட நேரம் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளும் திறன் இதற்கு உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் ட்ரோன்களின் பராமரிப்பு மற்றும் பயன்பாட்டுக்குத் தயாராக வைத்திருக்கும் பொறுப்பையும் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



