தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி புதுச்சேரி காங்கிரஸ் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, புதுச்சேரி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அரியாங்குப்பத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் (SIR) பணிகளில் கடுமையான இமாலயக் குளறுபடிகள் தொடர்ந்து அரங்கேறி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சக தேர்தல் ஆணையர்களின் கருத்துகளை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாகவும், சர்வாதிகாரப் போக்கிலும் செயல்பட்டு வருவது அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று இப்போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அரியாங்குப்பம் பிரம்மன் சிலை அருகில் திரண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும், அரசமைப்புச் சட்ட மாண்புகளை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நாட்டின் தேர்தல் நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.



