புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்கு சேவையாற்ற சேது செல்வத்திற்கு வாக்களியுங்கள்: திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா வேண்டுகோள்!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து, தொகுதி மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற திமுக வேட்பாளர் சேது செல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா பொதுமக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து, புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., திமுக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி, மாநில அமைப்பாளர் இரா. சிவா, எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் மருத்துவர் பொன். கெளதமசிகாமணி, மத்திய மாவட்டச் செயலாளர் மருத்துவர் ஆ. இலட்சுமணன் எம்.எல்.ஏ., காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அ. செந்தில் (எ) ரமேஷ், ராஜ்பவன் சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன், நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வே. கார்த்திகேயன், வானூர் சட்டமன்ற உறுப்பினர் கெளதம் திராவிடமணி, தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் டாக்டர் நித்திஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

லட்சுமி நகர், வேலன் நகர், சின்னையன்பேட் மற்றும் ஜெயராம் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தலைவர்கள் வாக்கு சேகரித்தனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்களைத் தூவியும் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாக்கு சேகரிப்பின்போது பேசிய இரா. சிவா, தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்கு யார் உண்மையிலேயே சேவையாற்றுவார்கள் என்பதை வாக்காளர்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்களுக்காக களத்தில் நின்று பணியாற்றி வரும் மக்கள் போராளியான சேது செல்வம், தேர்தல் களத்தில் பின்னடைவைச் சந்தித்த போதிலும் தொடர்ந்து மக்கள் பணியையே ஆற்றி வந்துள்ளார் என்றும், அவரை வெற்றி பெறச் செய்தால் தொகுதிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும் என்றும் உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக வேட்பாளர் சேது செல்வம் வெற்றி பெற்றால் தட்டாஞ்சாவடி தொகுதியில் சுகாதாரமான தடையற்ற குடிநீர் விநியோகம், முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி, சீரான சாலை கட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழிகாட்டுதலுடன் கூடிய வங்கிக் கடன் உதவிகள், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு இலவச மனைப்பட்டா உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும் என்றார். இந்த களப் பிரச்சாரத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கவேனா செந்தில்வேலன், தொகுதி செயலாளர்கள் நடராஜன், சக்திவேல் உள்ளிட்ட தோழமை மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன