புதுச்சேரி

காங்கிரஸ், திமுக வேட்பாளர்கள் கடன் வாங்கப்பட்டவர்கள்: தட்டாஞ்சாவடியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீம் தீவிர குற்றச்சாட்டு

புதுச்சேரி, செப். 30:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்கள் பிற கட்சிகளில் இருந்து கடன் வாங்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சலீம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட வி.வி.பி. நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சலீம் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தட்டாஞ்சாவடி தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே இருந்து வருவதாகக் குறிப்பிட்டார். முன்னதாக தாங்கள் மேற்கொண்ட பாதயாத்திரையின் போது, முதல்வர் இப்பகுதியை எட்டிப்பார்க்காதது குறித்து சுட்டிக்காட்டியதாகவும், அதற்கு முதல்வரே வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தொகுதியின் அடிப்படை உள்கட்டமைப்பு பிரச்சினைகளை பட்டியலிட்ட அவர், “குண்டுப்பாளையம் பகுதியில் மழைநீர் வாய்க்கால் பணிகள் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் அருந்த தகுதியற்ற நிலையில் உள்ளது. வீடுகளுக்கு வரும் மின்சாரம் குறைந்த அழுத்தத்துடன் விநியோகிக்கப்படுவதால் பொதுமக்களின் விலைமதிப்பற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் தொடர்ந்து பழுதடைந்து வருகின்றன. மழைக்காலங்களில் ஈ.சி.ஆர் சாலையிலிருந்து வெளியேறும் வெள்ளநீர் திலகர் நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. அவ்வை நகர் மற்றும் ராஜாஜி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது” என்று குற்றம்சாட்டினார்.

தொகுதியின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பேசிய அவர், தட்டாஞ்சாவடி தொகுதியில் அடுத்தடுத்து மூன்று கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மூடிக்கிடக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஏ.எப்.டி. பஞ்சாலை வளாகத்தில் நவீன ஜவுளிப் பூங்கா அமைத்தால் சுமார் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

எதிர்க்கட்சி வேட்பாளர்களை கடுமையாக விமர்சித்த அவர், “என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சிபிஐ தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவர். மறுபுறம் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்கள் கடன் வாங்கப்பட்டு தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர் ஆவார். காமாட்சியம்மன் கோயில் நிலத்தை மீட்க நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்தினோம். அரசு அதிகாரிகளின் ஊழல் முறைகேடுகள் அம்பலமாகியுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் தொகுதி மக்கள் ஆளுங்கட்சி மற்றும் சந்தர்ப்பவாதக் கூட்டணிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன