புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி: அப்பா பைத்தியசாமி கோவிலில் சான்றிதழ் வைத்து வழிபட்ட அசோக் ஆனந்த்!

புதுச்சேரி, அக். 9: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோக் ஆனந்த் அபார வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் இருந்து வெற்றிச் சான்றிதழைப் பெற்ற அவர், முதலமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. சுற்றுகளின் முடிவில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பகல் 12.15 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழை அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ. பெற்றுக்கொண்டார்.

வெற்றி அறிவிப்பைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் என். ரங்கசாமியின் இல்லத்திற்கு அசோக் ஆனந்த் சென்றார். அங்குள்ள ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியசாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

அப்போது, தனது தேர்தல் வெற்றி சான்றிதழை அப்பா பைத்தியசாமி சன்னதியில் வைத்து அசோக் ஆனந்த் மனமுருகி ஆசி பெற்றார். இந்நிகழ்வின் போது என்.டி.ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு புதிய சட்டமன்ற உறுப்பினருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன