புதுச்சேரியில் புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகும்: அமித் ஷா
ரூ.2,500 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்கத் திட்டங்கள், புதுச்சேரி–காரைக்கால் இடையிலான நான்கு வழிச்சாலை இணைப்பு மற்றும் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் ஆகியவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்று வரும் மத்திய அரசின் ஆதரவிலான வளர்ச்சித் திட்டங்கள், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீடுகளுக்கும் ஊக்கமளிக்கும் என அவர் கூறினார். புதுச்சேரி–காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விமான நிலைய விரிவாக்கத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், விமான இணைப்பு மேம்பட்டு புதுச்சேரியின் சுற்றுலா மற்றும் தொழில் துறைகளுக்கு உத்வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு முன்பே மத்திய உதவி கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மரக்காணம்–புதுச்சேரி இடையிலான 46 கி.மீ. நான்கு வழிச்சாலை திட்டம் ரூ.2,157 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தத் திட்டம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வணிக, சுற்றுலா வளர்ச்சிக்கு துணைபுரியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

