தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM), வேட்பாளர்களின் விவரங்கள் மற்றும் தேர்தல் சின்னங்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இப்பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் பொருத்தப்பட்டு, இயந்திரங்களின் செயல்பாடுகள் துல்லியமாகப் பரிசோதிக்கப்பட்டு வாக்குப்பதிவிற்குத் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தும் பணிகளை, புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியான அ. குலோத்துங்கன் இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு தீவிர ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தட்டாஞ்சாவடி தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் மற்றும் தேர்தல் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


