புதுச்சேரி சாரம் அரசு உயர்நிலைப் பள்ளியை தத்தெடுத்து முன்மாதிரிப் பள்ளியாக மாற்ற மார்டின் அறக்கட்டளை முடிவு
புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட சாரம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர். சுப்பிரமணியன் அரசு உயர்நிலைப் பள்ளியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் விதைப்பந்து தயாரிப்பு மற்றும் நடுகை விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜோஸ் சார்லஸ் மார்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.
விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய ஜோஸ் சார்லஸ் மார்டின், மார்டின் அறக்கட்டளை சார்பாக இந்த எஸ்.ஆர். சுப்பிரமணியன் அரசு உயர்நிலைப் பள்ளி முழுமையாகத் தத்தெடுக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், இப்பள்ளியை காமராஜ் நகர் தொகுதியின் மிகச்சிறந்த முன்மாதிரிப் பள்ளியாக மாற்ற அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களின் கல்வித் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகளை முழுமையாகக் கேட்டறிந்து, அறக்கட்டளை சார்பில் அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மார்டின் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



