புதுச்சேரி

திட்ட அடிப்படையிலான தற்காலிக பணியாளர் நியமனங்களுக்கு புதுச்சேரி அரசு கொள்கை

புதுச்சேரி அரசு, திட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட பணிகளுக்காக தற்காலிகத் தொழிலாளர்கள் அல்லது பணியாளர்களை நியமிப்பதற்கான புதிய கொள்கையை அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை கடந்த 2021 பிப்ரவரி 4-ஆம் தேதி இதற்கான அரசாணையை வெளியிட்டது.

இந்தக் கொள்கை அரசு துறைகள், அரசு சார்பு அமைப்புகள், நிறுவனங்கள், சங்கங்கள், குழுக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொருந்தும். இருப்பினும், நிரந்தர பணிகளுக்கு அல்லாமல் குறிப்பிட்ட திட்டம் அல்லது பணிக்காக மட்டும் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கே இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையின் அடிப்படையிலும், பணிக்குத் தேவையான காலத்திற்கும் மட்டுமே நியமனம் செய்யப்பட வேண்டும். அதற்கான நிதி முன்கூட்டியே ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்; மேலும் தலைமைச் செயலர் மற்றும் நிதித்துறையின் முன்ஒப்புதலும் பெறப்பட வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியாளர் தேர்வு நடைமுறை போட்டித்தன்மை, வெளிப்படைத்தன்மை, தகுதி மற்றும் நியாயம் ஆகிய அடிப்படைகளில் அமைய வேண்டும். தேர்வுக்கான நிர்வாகச் செயலரின் ஒப்புதல் கட்டாயம் என்றும், தேர்வு நடைமுறையின் நேர்மையை உறுதி செய்ய பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை ஒருங்கிணைப்பு அமைப்பாகச் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் நியமன விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில், அனைத்து நியமனங்களும் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாச அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரசாணை வலியுறுத்துகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன