முத்திரையர்பாளையம் அரசு பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரி முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2005 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளிப்பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன், தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். பழைய வகுப்பறை நிகழ்வுகள், ஆசிரியர்களின் கண்டிப்பு மற்றும் மாணவர்களின் குறும்புகளை நாடகமாக நடித்து காட்டியதுடன், ஆசிரியர்கள் தவறு செய்த மாணவர்களை கையை நீட்ட சொல்லி பிரம்பால் அடிப்பது போல் நடித்து காட்டி பழைய நினைவுகளை தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்தனர்.
முன்னாள் மாணவர்களின் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக பள்ளிக்கு நிதி உதவி வழங்கப்பட்டதுடன், தற்போது பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் எழுதுபொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.


